சேலம் மாவட்டத்தில் 77,457 ஹெக்டர் பரப்பில் உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்புக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கூட்டுறவு சங்கங்களில் 26,149 டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதில் யூரியா 7,401 டன், டிஏபி 2,699 டன், பொட்டாஷ் 2,563 டன், காம்ப்ளக்ஸ் 12,490 டன் மற்றும் எஸ்.எஸ்.பி 996 டன் ஆகியவை அடங்கும்.
மேலும், நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான தரமான விதைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் இதுவரை 459.4 மி.மீ மழை பெய்துள்ளது. வேளாண் கடன் திட்டங்கள் மற்றும் மல்பெரி சாகுபடி குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.